லிந்துலை – வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயது சிறுனை கொடுமைப்படுத்திய சிறுவனின் சிறியதாயார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் தனது சிறிய தாயாரினால் கடந்த சில தினங்களாக கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனை விசாரித்து அறிந்த பாடசாலை சமூகம் லிந்துலை பொலிஸ் இணையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சித்திரவதைக்கு உள்ளான சிறுவன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (23) மாற்றப்பட்டுள்ளார்.
அதேவேளை சிறுவனின் சிறிய தாயாரை வரவழைத்து பொலிஸார் விசாரணைகளுக்கு உட்படுத்தியதுடன் , லிந்துலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இன்றைய தினம் (24) நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெண் ஒரு குழந்தையின் தாய் என்பதோடு, தற்போது அவர் ஒரு கர்ப்பிணிப் பெண் எனவும் கூறப்படுகிறது. அத்தோடு, கொடூர சித்திரவதைக்கு உள்ளான சிறுவனின் தாய் கொழும்பில் பணியாற்றி வருவதும், அவர் தனது மகனை சிறுவனின் சிறிய தாயாரிடம் பாதுகாப்புக்காக விட்டுச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுவன் இவ்வருடம் நடைபெறவிருக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ளதுடன் , நாகசேனை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.