திருகோணமலை – கிண்ணியா, ஆலங்கேணி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் மாலை (20-8-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முகமட் லெப்பை முபாரக் என்பவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆலங்கேணி பாலத்துக்கு அருகில் ஆற்றில் மிதந்து கிடந்த சடலத்தை கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி மௌலவி எம். எஸ்.ஷாபி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, குறித்த நபரின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதால் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
குறித்த மரணம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.