ஹட்டன் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து நான்கு மாணவர்கள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (01-08-2024) 3.00 மணியளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒரே பாடசாலையில் கல்வி பயின்று வரும் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பாடசாலை நேரம் நிறைவடைந்து வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில், ஹட்டன் பேருந்து நிலையத்தில் வைத்து ஒரு மாணவன் கத்தியால் மற்றொரு மாணவனை தாக்கியுள்ளார்.
இந்த மோதலில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவனுக்கு கைபகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மொத்தம் 4 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடாத்திய மாணவனை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.