ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பது தொடர்பில் தற்போது ரகசி கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வஜன வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரமே போதுமான சாத்தியம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சட்ட வல்லுனர்களிடம் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. இதனூடாக ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்திலிருந்து ஆறு வருடங்களாக நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
19வது திருத்தச் சட்டத்தில் பொது வாக்கெடுப்பு இன்றி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறிலிருந்து ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டதால் மீண்டும் அதேபோன்று ஐந்திலிருந்து , ஆறாக அதிகரிக்க முடியும் எனவும் சட்ட வல்லுனர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்தால், அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டி வரும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.