கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்காடு சந்தியில் உள்ள முச்சக்கரவண்டிகளின் உரிமையாளர்கள் நிழல்தரும் மரங்களை நாட்டி வைத்து அதற்கான பாதுகாப்பு வேலியினையையும் அமைத்துள்ளனர்.
புதுக்காட்டுச்சந்தியில் இருந்து மருதங்கேணி செல்லும் வீதியின் அருகில் இருந்த பாரிய மரங்களை நீர்ப்பாசன திணைக்களமானது கடந்த வருடம் கிளிநொச்சி இரணைமடு குளத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தினூடாக பாரிய பழமை வாய்ந்த மரங்களை வெட்டியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறித்த விடயம் தொடர்பில் கிராம மக்களால் கடும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது இருப்பினும் வெட்டப்பட்ட அனைத்து மரங்களுக்கும் பதில் மரங்கள் மீண்டும் தாம் வைக்கவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் இன்று அதே கிராமங்களை சேர்ந்த புதுக்காடு முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இணைந்து எதிர்கால சந்ததிகளுக்கு பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பாரிய நிழல் தரும் மரக்கன்றுகளை நாட்டி அதற்கான பாதுகாப்பு வேலிகளையும் அமைத்திருந்தனர்.
இச் செயல் மற்றவர்களுக்கு ஒரு எடுத்து காட்டாக அமையும் எனவும் அனைவரும் மர நடுகைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.