முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (2024.05.09) பிறப்பித்த இடைக்கால உத்தரவை கலைப்பதற்கான தீர்மானத்தை மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.
சட்டத்தரணி ஜயமுதிதா ஜயசூரிய ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுவில் பிரதிவாதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டகு சரச்சந்திர குறிப்பிடப்பட்டுள்ளார்.
பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தனது மேன்முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ள விதம் சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை நீக்குவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறும் மைத்திரிபால சிறிசேனவின் மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.