புத்தளம் – ஆண்டிகம் பகுதியில் 25 அடி உயரம் கொண்ட வேம்பு மரத்தில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் (05) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆண்டிகம, மயில்லாவெவ பகுதியைச் சேர்ந்த மனன்னலாகே பிலேமசிறி (வயது 49) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபருக்கும், மனைவிக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (2024.05.05) மாலை மயில்லாவெவ பகுதியில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகிலுள்ள 25 அடி உயரம் கொண்ட பாரிய வேம்பு மரத்தின் மீது ஏறிய நபர், அந்த மரக்கொப்பொன்றில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் இதுபற்றி பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற மஹாகும்புக்கடவல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அத்துடன், சம்பவ இடத்திற்கு சென்ற புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணையை நடத்தினார்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, குறித்த நபர் தூக்கிட்டதன் காரணமாக கழுத்து இறுகியதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மஹகும்புக்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.