புதுக்குடியிருப்பு – மல்லிகைதீவு பகுதியில் ஆட்டு காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (16-04-2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 9ஆம் வட்டாரம், மல்லிகைதீவு பகுதியில் ஆட்டு மந்தையில் கடமையில் இருந்த இருவரையும் தாக்கிவிட்டு 9 இலட்சத்து முப்பத்தையாயிரம் பெறுமதியான 35 ஆடுகளை குழுவொன்று திருடிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான இருவரில் 55 வயதுடைய நபரொருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியபடுத்தியதனையடுத்து சந்தேகத்தின் பேரில் வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் 15 ஆடுகள் மீட்கப்பட்டு, ஆடுகளை கடத்தி செல்ல பயன்படுத்திய கப் ரக வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளளது.
இந்நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.