வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று (2024.04.15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்புக்கு இணையாக வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
நாங்கள் படிப்படியாக இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில், சுமார் 1,500 முதல் 2,000 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன.
இப்போது வாகன இறக்குமதிக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப இந்தக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து தளர்த்துவோம். சுற்றுலாத் துறைக்குத் தேவையான 250 பேருந்துகள் மற்றும் 750 வேன்களை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம்.
அரசாங்கம், நிதி அமைச்சு மற்றும் திறைசேரி என்பன முறையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கைகளின் அடிப்படையில் தீர்மானங்களை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எங்கள் கையிருப்பு தெளிவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது, இது ரூபாயின் மதிப்பு மேலும் உயர்வதற்கு வழிவகுக்கிறது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், அரசாங்கம் வாகன இறக்குமதியை சரியான ஒழுங்குமுறையின் அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். “இந்த விவகாரத்தை விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய வாகனங்கள், வாகனங்களின் எரிபொருள் நுகர்வு, இலங்கையின் வீதி அமைப்புடன் அவை பொருந்தக்கூடிய தன்மை மற்றும் நாட்டிற்குள் கிடைக்கும் வாகனங்கள் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து இந்த குழுவினர் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.