சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும்.டாக்டர் போப்[Dr.Pope]”சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது என்று கூறியுள்ளார்.தமிழர்களின் படிப்படியான சிந்தனையின் வளர்ச்சியால் மட்டுமே சைவ சித்தாந்தம் உருவானதாக எமக்கு தோன்றுகிறது.ஆகம கொள்கைகளை அடிப் படையாகக் கொண்ட இந்த சமய நெறி,அதன் கட்டமைப்பாலும் அதன் சிந்தனையாலும்,நான்கு வேதங்களின் சிந்தனைகளாலும் அதன் நடைமுறைகளாலும் கட்டமைக்கப்பட்ட சமய நெறியில் இருந்து இயல்பாகவே முற்றிலும் வேறுபட்டது.ஆகவே இந்த இரண்டும் கட்டாயம் ஒரே தேசிய இனத்திற்கு உரியது என கருத முடியாது.பிந்தியது ஆரியருக்கு உரித்தேனின்,முந்தியது திராவிட குழுவினருக்கு உரியது ஆகும்.திராவிட குழுக்களிலும் தமிழரே,வேத காலத்திற்கு முன்னமே நாகரிகம் அடைந்தவர்கள் ஆவார்கள்.ஆகவே தமிழரே சைவ ஆகமத்தை
ஏற்படுத்தியவர்கள் என்பது சரியான காரணத்துடன் எடுத்த அநுமானம் ஆகும்.எனவே,சைவ சித்தாந்தம் தமிழருடையதே என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் இது காட்டுகிறது.எடுத்ததற்கெல்லாம் “சைவமும் தமிழும். சைவமும் தமிழும்” என்று நம்மவர்கள் கூறுவதும் இதனால் போலும்.ஆகவே பண்டைய தமிழ் இலக்கியம், பெருந்திரளானவை சைவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டவையாக இருக்கலாம் என யாரும் எதிர்பார்க்கலாம். ஆனால் இது ஏமாற்றத்தையே கொடுக்கிறது.தமிழரின் இந்த வரலாற்று காலத்தில் அல்லது சங்க இலக்கிய காலத்தில், பண்டைய தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த கற்றறிவாளர்கள், தத்துவ மற்றும் மத ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுத தமிழை தேர்ந்தெடுக்கவில்லை. கி பி பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே, தமிழ் நாட்டில் அன்று நிலவிய சமூக எழுச்சி மற்றும் மத கொந்தளிப்பு காரணமாக,மெய்கண்ட தேவர் என்பவர்,முன்னைய அனைத்து மரபுகளையும் தாண்டி, சிவஞான போதம் என்ற சைவ சித்தாந்த சாத்திரத்தை தமிழில் தந்தார்.அதற்கு
முன்,திருவுந்தியார்,திருக்களிற்றுப் படியார் ஆகிய இரு சிறு படைப்புகளை தவிர மற்ற எல்லா தத்துவ மற்றும் சமய நூல்கள் சமஸ்கிரத மொழியிலேயே எழுதப்பட்டன. அன்று இப்படி சமஸ்கிரதத்தில் எழுதுவது ஒரு நாகரிகமாக தமிழர் மத்தியில் இருந்தது. இவைகளுடன், இன்னும் ஒரு இலக்கியம் பக்தி பாடல்களை கொண்டவையாக, ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து வரத்தொடங்கின.இவையும் சைவ சித்தாந்தம் போல்,மிகவும் முக்கியமானவை ஆகும்.இந்த நூல்களின் தொகுப்பை பன்னிரண்டு திருமுறைகள் என அழைக்கப்படுகின்றன. இதில் பத்தாவது திருமுறையான திருமூலரின் திருமந்திரம் சிறப்பு கவனத்திற்கு உரியது ஆகும்.இது மிக உயர்ந்த கருத்துக்களும்,மறைபொருட்களும் கொண்ட,ஒரு சைவ ஆகமம் நூல் என்றும் போற்றப்படுகிறது. அது மட்டும் அல்ல,இது தீர்க்கதரிசி மற்றும் துறவிகளின் ஆன்மீக அனுபவங்களை கொண்டுள்ளதே. மற்றவைகளை விட மிகவும் முக்கியமானது ஆகும்.இது,அறிவாளர்களை அன்றும் இன்றும் வியப்பில் ஆழ்த்துக்கிறது. இது பல புதிர்களைக் கொண்டுள்ளது.இதன் நூல் ஆசிரியர்,இந்த புதிர்களை,இன்னும் ஒரு புதிர் மூலம் தீர்க்க முயற்சிக்கிறார்.உதாரணமாக,திருமூலரின் எட்டாம் தந்திரத்தில்,ஒரு பாடலை பாருங்கள்.எப்படி இது புதிர் மூலம் புதிரை தீர்க்கிறது என்பது உங்களுக்கு புரியும்.
என்றாலும் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப் படுகின்றது.நான் யார்? கடவுள் இருக்கிறாரா?கடவுள், உயிர்,அண்டம், இவைகளின் இயல்பு என்ன ?உலகத்துடனும்,கடவுளுடனும் எனது தொடர்பு என்ன?ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சம்பவம்,எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன?எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன.சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க,வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது.மக்களின் சுதந்திரம், விடுதலை,உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும்,இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை.மூட நம்பிக்கையிற்கும்,கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இட மில்லை.கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை.சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடையவர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள்.”அன்பே
சிவம்”,”தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி” என்று அது எங்களுக்கு போதிக்கிறது.அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை.இரண்டும் ஒன்றே!இந்த முதுமொழி,தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது.அதாவது அன்புதான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன.கணியன் பூங்குன்றனார் எனும் கவிஞன் புறநானூறு-192 இல் “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்று அறைகூவல் ஒன்றை விடுகிறான். நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தைத் திறந்துகாட்டி விரிகடல்சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும்,விழியும் ஒளியும் போல் மக்கள் எலாம் நம் உறவே என்றும்- புதிய வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்தான் அந்த கவிஞன்!