யாழ். புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்றையதினம் (28-03-2024) முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கைக்கேற்ப சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பமானது.
புத்தூர் சந்தியில் உள்ள ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்துக்கு அருகில் ஆலய திருவிழா ஒன்றுக்காக தண்ணீர்ப் பந்தல் அமைத்த இளைஞர்கள் ஒலிபெருக்கியை அதிக சத்தத்தில் ஒலிக்கவிட்டிருந்தனர்.
கடந்த ஆண்டும் இதே போன்று நடந்து ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேவைகளுக்கு இடையூறும் விளைவிக்கப்பட்டு, பின்னர் சட்ட நடவடிக்கை மூலம் வழமைக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவ சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இம்முறையும் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி பாவனை அனுமதி வழங்கப்பட்டு மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் சேவைக்கு இடையூறு செய்யும் வகையில் அதிக சத்ததமாக பாடல்கள் ஒலிபரப்பபட்டுள்ளன.
இது தொடர்பாக வைத்தியசாலை வைத்திய அதிகாரியினால் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் முறையிடப்பட்டது.
முன்னைய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தலையீட்டினால் அவ் வைத்தியர் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கைக்கேற்ப சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பமானது.