வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள ‘வெண் ஈ நோய்’ தாக்கம் மன்னார் மாவட்டத்திலும் குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் அதிகரித்துள்ள நிலையில் குறித்த நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பயிர் பாதுகாப்பு சேவை நிலைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (15) மன்னாருக்கு வருகை தந்து மன்னாரிலும் குறித்த நோய் தாக்கம் தொடர்பாக தெளிவு படுத்தி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் வளாகத்திலும் நோய் தாக்கத்திற்கு உள்ளான தென்னை மரங்களில் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் விடப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலகத்தில் குறித்த நோயின் தாக்கம் தொடர்பிலும் வருகை தந்த அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டு குறித்த நோயை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலும் மன்னார் நகரப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கிராமங்களிலும், தலைமன்னார் பகுதியிலும் குறித்த நோயை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் தென்னை மரங்களில் விடப்பட்டுள்ளது.
குறிப்பாக கரையோர பிரதேச பகுதிகளில் குறித்த நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த தென்னை மரங்களில் ஏற்படும் நோய் தாக்கம் ஏனைய மரங்களுக்கும் பரவும் வாய்ப்பு காணப்படுவதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பயன் தரும் மரங்கள் முற்று முழுதாக தனது பயன் பாட்டை இழக்கும் நிலை காணப்படுகின்றது.
குறித்த நடவடிக்கைக்காக பயிர் பாதுகாப்பு சேவை நிலைய மேலதிக பணிப்பாளர் பிரபாத் நிஷாந்த,விவசாய ஆராய்ச்சி நிலைய திருநெல்வேலி உதவி பணிப்பாளர் ஸ்ரீ.ராஜேஷ் கண்ணா மற்றும் மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் அ.சகிலா பானு.மற்றும் பிரதேச செயலாளர் திணைக்கள பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.