திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இருதரப்பினரும் சமாதானமாக முடித்துக் கொள்வதற்கு முன் வர வேண்டுமென சமூக ஆர்வலர்களும், சமய பெரியார்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த மூன்று சமயப் பெரியார்கள் முன்னிலையில் இந்த வழக்கை எவ்வாறு இணக்கமாக முடித்துக் கொள்வது பற்றி ஆராய்வதற்காக முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடர்பாக சட்டத்தரணி தூஸ்யந்தன் தலைமையில் நிபந்தனைகள் ஆராயப்பட்டது. அதன் தொடர்ச்சியாக,
அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற்று யாப்பை திருத்தம் செய்தல் அல்லது புதிய யாப்பு ஒன்றை உருவாக்குதல்.
வெளிப்படை தன்மையாக புதிய யாப்புக்கு அல்லது திருத்திய யாப்புக்கு பொதுச் சபையில் அங்கீகாரம் பெறுதல்.
புதிய யாப்பின் பிரகாரம் தேர்தல் ஒன்றை நடத்துதல். புதிய அங்கத்தவர்களை இணைப்பது தொடர்பில் வெளிப்படை தன்மையான சிறந்த பொறிமுறை ஒன்றை கையாளுதல்.
ஆகிய விடயங்களுக்கு ஆலய நிர்வாகம் இணக்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த இணக்கப்பாடு தொடர்பில் ஓரிரு நாட்களுக்குள் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஆலயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த இரு தரப்பினரையும் சமாதானமாக வழக்கை முடித்துக் கொள்வதற்கு முன்வருமாறும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
என்ன பிரச்சனை இருந்தாலும் அவை எமக்குள் பேசி தீர்க்கப்பட வேண்டும்.விட்டுக்கொடுப்பற்ற முறையில் ஏட்டிக்கு போட்டியாக இந்த ஆலயத்தை நீதிமன்றத்தில் நிறுத்துவதால் ஆலயம் தமிழர்களிடமிருந்து பறிபோவதை எவராலும் தடுக்க முடியாது.
இச்செய்தியானது திருகோணமலை சைவ மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து இடங்களில் வாழும் சைவ மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக காணப்படுகின்றது எனவும் சட்ட ஆர்வலரொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.