கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் மிக மோசமாக அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வினால் இரணைமடு குளத்திற்கும் அதனை சூழவுள்ள வயல் நிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை தொடர்ந்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களை இழக்க நேரிடுவதோடு, இரணைமடு குளத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே குளத்தையும் வயலையும் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பான அதிகாரிகளிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரணைமடு குளத்திற்கு கீழ் கோரமோட்டை ஆற்றுப்பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சமீப காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுக்கடங்காது மிக மோசமாக அதிகரித்துள்ளது.
உரிய தரப்பினர்களுக்கு இது தொடர்பில் தகவல் வழங்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் , அவர்களின் வீடுகளுக்குள் பட்டாசுகளை கொளுத்தி எறிந்து எச்சரிக்கை விடும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகிறது.
இதனால் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பலர் மௌனமாக கடந்து சென்று விடுவதாக பிரதேச வாசி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கு பொலிஸ், பாதுகாப்புத் தரப்பினர்கள், அரசில்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் இதனால் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
அதேசமயம் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்களால் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதோடு நடவடிக்கை நின்றுவிடுகிறது.
அதோடு மாவட்ட எம்பியிடம் முறையிட்டால் அவரும் திரும்பி பார்ப்பதாக இல்லை என்றும் , பொலீஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினர்களிடம் முறையிட்டால் அவர்கள் மணல் அகழ்வோரிடம் தங்களை காட்டிக்கொடுப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.