இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக ஐசிசி விதித்துள்ள தடை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்து வரும் ஐசிசி பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலார்டைஸ் உடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறான குறிப்பை தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ICC) அடுத்த செயற்குழு கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதால், இலங்கையில் தடையை நீக்குவதற்கு ‘zoom’ ஊடாக விசேட செயற்குழு கூட்டம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால் எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் வருடாந்த மாநாட்டை இலங்கை இழக்க நேரிடும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.