இலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் கடந்த 6 மாதங்களாக குப்பைமேட்டில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந்த லொரியில் ஆறு மாதங்களாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹொரணையை சேர்ந்த புலஸ்தி சானக என்ற இந்த இளைஞன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கி 10 லட்சம் ரூபாவை கொடுத்து சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அந்த இளைஞன் உட்பட பெருமளவிலான இளைஞர்கள் ஓமன் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதேவேளை கடத்தல்காரர்களிடம் சிக்கிய ஏனைய இலங்கை இளைஞர்கள் ஓமானில் பல்வேறு இடங்களில் அவதிப்பட்டு வருவதாக புலஸ்தி சானக தெரிவித்தார்.
ஓமன் நாட்டில் பல இடங்களில் தங்கி இருந்தும், 6 மாதங்களாக குப்பை கிடங்கில் நிறுத்தப்பட்ட உடைந்த லொரியில் தான் வாழ்ந்து வருவதாகவும், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள் தான் தன்னை காப்பாற்றி வருவதாகவும் மிகுந்த வேதனையுடன் கூறினார்.
எனினும் இது தொடர்பில் இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்தும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை எனவும், பல மாதங்களாக வயிற்றில் ஒரு சோறு கூட இல்லாமல் தவிப்பதாகவும் முடிந்தவரை ஓமானில் உள்ள யாராவது தமக்கு உதவுமாறும் புலசத்தி கோருவதுடன் , தன்னை இலங்கைக்கு திரும்பஅழைத்து வர யாராவது உதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.