நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி தலைமறைவாவதை தடுப்பதற்கும், அவர்களை கைது செய்யவும், பதில் பொலிஸ்துறை மா அதிபர் சிரேஷ்ட பொலிஸ்துறைதுறை அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கான ஆலோசனைகள் சகல காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளில் எந்தவொரு நபருக்கும் பொலிஸ்துறையினரால் அநீதி ஏற்படுமாயின் அது தொடர்பில், சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பழிவாங்கல் நோக்கத்துடன் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.
இந்தநிலையில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் பொலிஸ்துறை பேச்சாளர் கோரியுள்ளார்.
இதேவேளை, கடந்த 17ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளின் ஊடாக இதுவரையான காலப்பகுதியில் 15086 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 755 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதுடன், 1134 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன், 10 கிலோகிராம் ஹெரோயின், 5.5 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 278 கிலோகிராம் கேரள கஞ்சா, 95 ஆயிரம் கஞ்சா செடிகள் என்பன இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதுதவிர, 69400 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.