நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் (04.01.2024) ஆம் திகதி நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை தொடர்பான கற்பித்தல் வகுப்புகளை நடாத்துவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்வரும் (29.12.2023) ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் மேற்கொள்ள முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் டெங்கு ஒழிப்பு சடவடிக்கைத் தொடர்பிலும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சையை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்தின் மூலம் தங்களின் உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.