ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் இன்று (2023.12.19) காலை ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில் ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, ரயில் பாதை தடைப்பட்டுள்ளதால் உடரட மெனிக்கே ரயிலும், பொடி மெனிகே ரயிலும் இன்று காலதாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, காலை 05.45 மணிக்கு பதுளையில் இருந்து கோட்டை வரை இயக்கப்பட வேண்டிய உடரட மெனிக்கே ரயில் இது வரை புறப்படாமல் உள்ளது.
அத்துடன், காலை 08.30 மணிக்கு கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த பொடி மெனிகே ரயிலும் சில மணித்தியாலங்கள் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவினால் தடைப்பட்ட ரயில் பாதையில் மண் அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.