முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்து வந்த வீட்டில் நேற்று முன் தினம் சனிக்கிழமை (04) சந்தேக நபர்கள் புகுந்து பல பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக ரெியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தேராவில் பகுதியில் உள்நாட்டு யுத்தத்தில் தனது கணவனை இழந்த பெண் ஒருவர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தாய் மற்றும் மகளுடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் வீட்டின் கூரையை பிரித்து வீட்டினுள் நுழைந்த மூன்று சந்தேக நபர்கள் குறித்த வீட்டில் இருந்த தாய், மகள், தாயின் தாய் ஆகிய மூவரின் கண்கள் கைகளை கட்டிவிட்டு , வீட்டில் சேமித்த வைத்த 90000 ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்.
அத்தோடு மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி நகைகளை நகைகளையும் கொள்ளையடித்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (04) இரவு 11 மணியளவில் வீட்டில் நுழைந்த திருடர்கள் நேற்று (05) அதிகாலை 3 மணிக்கு பின்னரே வீட்டை விட்டு சென்றதாகவும் தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .
முன்னைய காலத்தில் நாம் எந்த பயமும் இன்றி வாழ்ந்தோம் ஆனால் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் பாதிக்கப்பட்ட பெண் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
அதோடு கொள்லையர்கள் எம்மை பொலிஸ் நிலையத்திறகோ ஊடகங்களுக்கோ தகவல் வழங்க கூடாது எனவும் அதை மீறி கூறினால் மூவரையும் வந்து கொலை செய்வோம் எனவும் மிரட்டி சென்றுள்ளதாக தாய் மேலும் தெரிவித்துள்ளார் .
எனினும் சம்பவம் தொடர்பில் இன்று (6) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.