தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை நோக்கி செல்லும் கலனிகம நுழைவாயிலில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளை கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு கடத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
37 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 7 மற்றும் 15 வயதுடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
முதல் திருமணத்தில் பெண்ணின் கணவர் இறந்துவிட்ட நிலையில், சில காலம் வேறு ஒருவருடன் வசித்து வந்துள்ளார். பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரைப் பிரிந்த பெண், இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அவர்கள் காலி தல்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்தனர். எனினும் இவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் பண்டாரகம பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மற்றுமொரு நபருடன் காரில் வந்த சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்து, அவரை அச்சுறுத்தி கடத்திச் சென்றுள்ளார்.
கலனிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் கார் நிறுத்தப்பட்டவுடன், அந்த பெண் காருக்குள் இருந்து ‘என்னை காப்பாற்றுங்கள்’ என சத்தமிட்டுள்ளார்.
அப்போது கலனிகம அதிவேக வீதி நுழைவாயிலில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் சுஜீவ உடனடியாகச் செயற்பட்டு காரை நிறுத்தி சோதனையிட நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் பண்டாரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், குடும்ப தகராறு காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காரை சோதனையிட்டபோது, அதில் பெரிய கத்தி ஒன்றும் சிக்கியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.