மின்கட்டணம் செலுத்த வேண்டும் என பொய் பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மின்சார சபைக்கு தாம் எழுதிய கடிதத்திற்கும் இதுவரை பதில் வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்திற்காக இலங்கை மின்சார சபை விநியோகித்த மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என மின்சார சபை தெரிவித்திருந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை மின்சார சபை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.
2019 ஆண்டு ஒன்பதாம் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வீரகெட்டிய வீட்டில் நடந்த திருமண வைபவத்திற்கு வழங்கிய தற்காலிக மின் விநியோகத்திற்காக 26,82,246.57 ரூபா செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மின்சாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள நாமல் ராஜபக்ச, இலங்கை மின்சார சபை அவ்வாறான எந்தவொரு மின் கட்டண பட்டியலையும் தங்களுக்கு இதுவரை அனுப்பவில்லை என கூறியுள்ளார்.
அத்துடன் குறித்த மின் கட்டணப் பட்டியல் எப்போது அனுப்பப்பட்டது என்பதை அறிவிக்குமாறும் கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.