மட்டக்களப்பில் நீராடிய போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற தாந்தாமலை குளத்தில் நீராட சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந் நபரை நேற்று (26) பிற்பகல் 2 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி, எருவில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மோகனசிங்கம் பிரகதீசன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பித்து இடம் பெற்று வரும் நிலையில் சம்பவ தினமான நேற்று (26) களுவாஞ்சிக்குடி, எருவில் பிரதேச மக்களின் திருவிழாவையிட்டு அந்த பகுதி மக்கள் ஆலய வழிபாட்டுக்கு சென்றுள்ளனர்.
இதன் போது ஆலய வழிபாட்டுக்கு சென்ற குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் தாந்தாமலை குளத்தில் நீராடிய போது குறித்த இளைஞன் நீரில் முழ்கியதையடுத்து அவரை நண்பர்கள் காப்பாற்றி மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸ் வண்டியில் கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டு. போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச் சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.