இலங்கையில் ஒலிவ் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்துவது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சு,
இலங்கையில் ஆலிவ் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற காலநிலையுடன் கூடிய பிரதேசங்கள் இருப்பதாகவும் அதற்கமைய அதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19வது அமர்வு இத்தாலியின் ரோம் நகரில் இந்த நாட்களில் நடைபெறவுள்ளதுடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த நாட்டில் ஆலிவ் பயிர்ச்செய்கையை விஸ்தரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறு இத்தாலியின் விவசாய அமைச்சருடனான கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக இலங்கையின் மண் அமைப்புக்கு ஏற்ற திராட்சை வகை அறிமுகம், கால்நடை வளர்ப்பு முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சி நிபுணர்களின் பரிமாற்றம், இத்தாலியில் இருந்து இலங்கையுடன் கால்நடைகளை பரிமாறிக்கொள்வதற்கான ஏற்பாடு, உணவு உற்பத்தி மற்றும் விவசாயத்துறையில் நிலையான அபிவிருத்தி, இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான உழைப்பு, படைகளின் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் போன்ற விடயங்களில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.