சீமெந்து விலை குறைக்கப்பட்டுள்ளமைக்கு இணையாக கம்பி, நிறப்பூச்சு உள்ளிட்ட ஏனைய கட்டுமானத் துறையின் மூலப்பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என நிர்மாணத்துறை சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
உள்ளூர் உற்பத்தி சீமெந்து மூடையொன்றின் விலையை நேற்று முதல் இரண்டாயிரத்து 300 என்ற விலையில் விற்பனை செய்ய வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் சீமெந்து விலையை போன்று ஏனைய அனைத்து மூலப்பொருட்களும் குறைக்கப்பட வேண்டும் என நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரித்துள்ளார்.
“முன்னதாக சீமெந்து மூடை ஒன்றின் உச்சபட்ச விலை 2,600 ரூபாவாக காணப்பட்ட போதும் வன்பொருள் வர்த்தக நிலையங்களில் 2,150 முதல் 2,200 ரூபா அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது சீமெந்து மூடை ஒன்றின் உச்சபட்ச விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டு 2,300 ரூபாவாக உச்சபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய சந்தைக்கு சீமெந்து மூடை ஒன்றை 1,800 அல்லது 1,900 ரூபா அளவில் பெற்றுக்கொள்ள முடியும்” என தாங்கள் எதிர்பார்ப்பதாக நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நிர்மாணத்துறைக்காக பயன்படுத்தப்படும் ஏனைய பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலையையும் குறைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.