முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வு பணி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி T.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா உள்ளிட்டவர்களினால் முன்னெடுக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் அகழ் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த 29 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது அங்கு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இது தொடர்பாக ஜூன் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் யூலை 6 திகதி இன்று அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதோடு அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிசாருக்கு ந்நிதிபதி பணிப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.