கின்னஸ் சாதனைக்காக மலையக மண்ணிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளைஞர்களை இழிவான வார்த்தைகளினால் பேசி சட்டையை பிடித்து துரத்தியதாக இளைஞர்கள் சிலர், பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பான காணொளி ஒன்றையும் முகநூலில் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொகவந்தலாவை – கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர்கள், யாழ்ப்பாணம் முதல் காலி வரை 566 கிலோமீட்டர் தூரத்தை 3 நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை படைக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளனர்.
இன்றைய தினம் (14-06-2023) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும் இந்த சாதனை பயணம் 16ம் திகதி வரை தொடரவுள்ளது.
இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவருக்கும் உலக சாதனையில் இடம் பிடிப்பதற்கான அனுமதி கடிதம் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் அண்மையில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சாதனை பயணத்தை இன்று ஆரம்பித்தனர். இதற்கு ஒத்துழைப்பு தருவதாக யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இணங்கியிருந்தார்.
இதனடிப்படையில் இன்று மதியம் 2.00 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த விக்கேஷ், தயாபரன் உட்பட்ட குழுவினரை பொலிஸ் அதிகாரிகள் இருவர் நடத்திய முறை மிகவும் மோசமாக இருந்ததாக இளைஞர்கள் காணொளி மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், தகாத வார்த்தை பிரயோகத்தினால் பேசியதுடன் மதுபோதையில் அட்டகாசம் புரிந்ததால் அப்பகுதியில் குழப்பம் ஏற்பட்டிருந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.