கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாயை விடுதலை செய்ய அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
இவ்வாறு நிரபராதியாக விடுவிக்கப்பட்டவர், நொச்சியாகம, பஹமுனேகமவில் வசிக்கும் இராணுவ பீரங்கி படைப்பிரிவின் முன்னாள் சிப்பாய் சேனக ஜயதிலக்க என்ற ஆனந்தா ஆவார்.
2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட மஹவெலிதானவில் பியசேன மத்தும பண்டார என்ற நபரை கத்தியால் குத்திக் கொன்றதற்காக இலங்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த குற்றவாளிக்கு எதிராக சட்டமா அதிபர் அனுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சட்டமா அதிபரினால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் மேலதிக குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அன்றைய அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சுனந்த குமார ரத்நாயக்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதன்போது வழக்கு விசாரணையின் முடிவில், நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்துக்காக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க தீர்ப்பளித்தார்.
பின்னர், மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்ததையடுத்து, மேன்முறையீட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் குழாம், வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்குமாறு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக சிறிநாத் குணசேகர முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை ஜூரி முன்னிலையில் பரிசீலிக்க நீதிமன்றத்தின் அனுமதியை வழங்கினார்.
அதன்படி, தொடர்ந்து ஐந்து நாட்கள் கூடிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ வீரரை கொலைக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிப்பதற்கு ஏகமனதாக முடிவு செய்தனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்காக சட்டத்தரணி சதுர தனஞ்சய ரணதுங்க, சிரேஷ்ட சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல ஆகியோருடன் முன்னிலையாகியிருந்தார். மேலும் வழக்குத் தொடருக்காக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி துமிந்த அல்விஸ் முன்னிலையானார்.
அப்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நிபுணத்துவ சட்ட வைத்தியராக இருந்த தனஞ்சய வைத்தியரத்ன உட்பட 20 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.