இரவு நேர விடுதி ஒன்றில் போதைப்பொருள் வர்த்தகரொருவருடன் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை பணி இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி இரவு கல்கிசை சேரம் வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இந்த விருந்துபசாரம் இடம்பெற்றதாகவும், குறித்த போதைப்பொருள் வர்த்தகர், விடுதியில் பணிபுரியும் பெண்ணொருவர் தலையில் கண்ணாடி குவளையினால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு குறித்த கான்ஸ்டபிள்கள் இருவரும் உதவி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குற்றம் புரிந்தவர் தப்பிச்செல்ல உதவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கல்கிசை குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.