இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரை பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களிடம் 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடியில் சிக்கிய இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவுக்கு அனுப்பிய முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் ருமேனியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் மாதாந்தம் ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.
நான்கு மாதங்களாக பணத்தை பெற்றுக்கொண்டு குறித்த பெண் தம்மை ஏமாற்றி வந்த நிலையில் பீரோவில் முறைப்பாடு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த இளைஞர்களின் கடவுச்சீட்டுகள் மற்றும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பெண் எடுத்துச் சென்றதாகவும், அவற்றை மறைத்துவைத்து ஏமாற்றி வருவதாகவும் இளைஞர்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உரிமம் இன்றி தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் பண மோசடியில் பெண் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் , சந்தேகநபரை தனி காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.