கொழும்பு மீகொட லயனல் ஜயசிங்க மாவத்தையின் மூன்று மாடி ஆடம்பர வீட்டில் இருந்து சுமார் 35 கோடி பெறுமதியான நீலக்கல் மற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கப்பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுடன் நேரடியாக வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் தொழிலதிபரின் வீட்டிலேயே இவ்வாறு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கடந்த ஐந்தாம் திகதி (05.05.2023) வர்த்தகர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கொட்டாவ பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றில் அன்னதானத்தில் ஈடுபட்டு பின்னர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள நெருங்கிய உறவினர் வீட்டில் சில மணித்தியாலங்களை செலவிட்டு வீடு திரும்பியதாக வர்த்தகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் நித்திரைக்கு சென்ற தொழிலதிபரை மறுநாள் காலை பொதுச்சுகாதாரப்பரிசோதகர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து அவருக்குச் சொந்தமான சில பைகள் வீதியில் காணப்படுவதாக அங்குள்ள தொலைபேசி எண்ணிலிருந்து தமக்கு அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வீட்டிலிருந்து பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வீட்டின் அலுமாரிகளை உடைக்காமல், வீட்டின் இரண்டாவது மாடியின் பின் பகுதியில் உள்ள ஜன்னலை உடைத்து இந்த திருட்டைச் செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.