களுத்துறை திஸ்ஸ தேசிய பாடசாலைக்கும் களுத்துறை தேசிய பாடசாலைக்கும் இடையேயான ஒரு நாள் கிரிக்கட் போட்டியின் போது கிரிக்கட் மட்டையினால் தாக்கப்பட்ட திஸ்ஸ தேசிய பாடசாலையின் உப தலைவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மக்கோன காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
மக்கோன பகுதியில் இடம்பெற்ற இந்த கிரிக்கட் போட்டியில் திஸ்ஸ தேசிய பாடசாலை அணி முதலில் துடுப்பாடியதுடன் பதிலளித்தாடிய களுத்துறை தேசிய பாடசாலை அணி இறுதி ஓவரில் வெற்றியிலக்கை கடந்து வெற்றியை பதிவு செய்தது.
அதன் பின்னர் மைதானத்தின் நடுவே பொருத்தப்பட்டிருந்த விக்கட்டுக்களை மாணவர்கள் அப்புறப்படுத்தியதால் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் திஸ்ஸ தேசிய பாடசாலையின் உப தலைவரை சிலர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இச் சம்பவத்தில் பாதிப்படைந்த அவர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.