யாழில் குழு ஒன்றினால் மருத்துவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மருத்துவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் மருத்துவரின் அலுவலகத்துக்கும் சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறப்படுகின்றது.
நடவடிக்கை எடுக்காத பொலிஸார்
இதனையடுத்தே மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10ஆம் திகதி புத்தூர் சந்தியில் அமைக்கப்பட்ட தாக சாந்தி நிலையத்தில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு பெரிய சத்தமாக பாடல்கள் இசைக்கப்பட்ட நிலையில் தமது சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மருத்துவரின் கருத்தை பொருட்படுத்தாதவர்கள் தொடர்ச்சியாக பாடல்களை அலறவிட்டுள்ளனர்.அந்த சம்பவத்தின் பின்னர் குழு ஒன்று மருத்துவரை எச்சரித்ததுடன், அலுவலகத்துக்கும் சேதம் விளைவித்தது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவேண்டும் அங்கு பணியாற்றும் ஊழியர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை மீள ஆரம்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.