நாட்டில் உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் அடுத்த வாரத்தின் பின்னரும் ஆசிரியர்கள் இணைந்துகொள்ளாத பட்சத்தில், அவசரகால சட்டத்தின் கீழ் கல்வியையும் அத்தியாவசிய சேவையாக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் முன்னேற்றம் தொடர்பில் இன்றைய தினம் (19-04-2023) முற்பகல் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, எந்தவொரு சூழ்நிலையிலும், மாணவர்களை பணயக்கைதிகளாக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய செயற்பாடுகளாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியான சட்ட ஏற்பாடுகளை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி,
கடந்த ஆண்டு பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளில் ஈடுபட்ட குழுவினரை கொண்டு இம்முறை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளை முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
பரீட்சைகள் தொடர்பிலான பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தத் தேவையான பணிகளை முன்னெடுக்குமாறும் கல்வி துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இப்பணிகளில் ஈடுபட மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்து அதற்குரிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கல்வித் துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.