ஒருவருக்கு எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. எலும்புகள் தான் நமது உடலைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த எலும்புகள் ஒருவரது வயது அதிகரிக்கும் போது பலவீனமாகத் தொடங்குகிறது. இது தவிர ஒருவரது ஒருசில பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகளும் ஒருவரது எலும்புகளை பலவீனமாக்குகின்றன.
முக்கியமாக தற்போது நம்மைச் சுற்றியுள்ள சில உணவுகள் நமது எலும்புகளை பலவீனமாக்கி அழிக்கின்றன.
நம் அனைவருக்கும் எலும்புகளை வலுவாக்க எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் என்பது தெரியும்.
ஆனால் எந்த உணவுகளை உட்கொண்டால் எலும்புகள் பலவீனமாகி ஆஸ்டியோபோரோசிஸை உண்டாக்கும் என்பது தெரிந்திருக்காது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
சோடியம் அதிகம் உள்ள உணவுகள்
நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சோடியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறோமோ அந்த அளவில் உடலில் இருந்து கால்சியம் சிறுநீரகத்தின் வழியாக இழக்கப்படும்.
எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாதது. எனவே எலும்புகள் பலவீனமாகாமல் இருக்க வேண்டுமானால் சோடியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
காப்ஃபைன் உணவுகள்
அதிகப்படியான காப்ஃபைனை உட்கொள்வது மாதவிடாய் நின்ற பின் பெண்களின் எலும்புகளின் அடர்த்தி குறைவதுடன் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே எலும்புகளின் வலிமையை பாதுகாக்க நினைத்தால் காப்ஃபைன் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நிறைந்த உணவுகள்
சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடலால் போதுமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் போகும்.
இப்படி உடலுக்கு வேண்டிய சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்பட்டு எலும்புகளுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கப் பெறாமல் போய் எலும்புகள் பலவீனமாகத் தொடங்கும்.
கார்போனேட்டட்/சோடா பானங்கள்
தற்போது பலவிதமான கார்போனேட்டட் பானங்கள் விற்கப்படுகின்றன. அதை பலர் அடிக்கடி வாங்கி குடித்தும் வருகிறார்கள்.
ஆனால் இந்த சோடா பானங்களை அளவுக்கு அதிகமாக குடித்தால் அது எலும்புகளை விரைவில் பலவீனமடையச் செய்து எளிதில் எலும்பு முறிவு மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை வரவழைக்கும்.
ஆல்கஹால்
ஆல்கஹால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை அனைவருமே அறிவோம்.
ஆனால் தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பார்ட்டி என்ற பெயரில் ஆல்கஹாலை அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
இப்படி ஆல்கஹாலை அதிகம் குடித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு எலும்புகளின் அடர்த்தி குறைந்து எலும்புகளும் பலவீனமாகும்.
பருப்பு வகைகள்
இதனை பலர் தவிர்த்து வருவதற்கு முக்கிய காரணம் அவை கால்சியம் உறிஞ்சுவதைத் தடுக்கும். பருப்பு வகைகளில் பைடேட்ஸ் என்ற பொருள் உள்ளது இது கால்சியத்தை உறிஞ்சும் உடலின் திறனில் இடையூறை ஏற்படுத்தி எலும்புகளை பலவீனமாக்குகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் ஒருவரது எலும்புகளை பலவீனமாக்கி விரைவில் எலும்பு தொடர்பான நோய்களால் அவதிப்பட வைக்கும்.
எனவே எலும்புகள் வலுவாக ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், இந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.