மட்டக்களப்பு நகரில் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த மூதூரைச் சேர்ந்த ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இந்நிலையில் குறித்த நபர் சுற்றுலா துறைக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்று அதற்கான காரியாலயம் ஒன்றை நகர் பகுதியிலுள்ள கல்முனைவீதியில் அமைத்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக ஒருவரிடம் 4 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவை வாங்கி சுற்றலா விசாவில் கட்டார் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு வேலைக்கு என்று சென்றவர் அறை ஒன்றில் தங்கவைத்த நிலையில் வாடகை பணத்தை செலுத்தாததால் அவர் அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து சுற்றுலா விசாவில் அனுப்பி வைத்துள்ளமை தெரியவந்ததையடுத்து அங்கிருந்து விமான மூலம் நாட்டுக்கு திரும்பிவந்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் விசாரணையில் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை மூதூரைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரைக் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து வேறு ஒரு நபரின் கடவுச் சீட்டையும் கைப்பற்றினர்.
இதில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்