மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைப் பகுதியான தமிழ் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு மாதந்தனை மேச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிறுவனங்கள் நிதியுதவி நிறுத்தவேண்டும்
இந்த திட்டத்துக்கு நிதியுதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் என தெரிவித்த அவர், அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்தப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடன் மயிலந்தனை மாதந்தனை மேச்சல் தரை பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அதோடு கிழக்கு மாகாண ஆளுநர், வனவளதிணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை போன்ற அனைத்து கட்டமைப்புக்களும் இங்குள்ள மேச்சல்தரை காணிகளை அபகரிப்பதற்கான நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அதுமட்டுமல்லாது கிழக்கு மாகாண ஆளுநருடைய முழு ஒத்துழைப்புடன் கண்ணுக்கு முன்னால் அவரது வழிகாட்டலில் இது நடப்பதாகவும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.