நாடளாவிய ரீதியில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக வாகன திருத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றில் அரைவாசிக்கும் மேற்பட்ட வாகனங்கள் அவற்றுக்கான சேர்விஸ் வழங்கப்படாத நிலையில் முழுமையாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உதிரிப் பாக விலைகள் அதிகரிப்பு
வாகன உதிரிப் பாகங்களுக்கான விலையேற்றம் வெகுவாக அதிகரித்துக் காணப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் வாகனங்களை திருத்துதல் மற்றும் சேர்விஸ் செய்தல் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் வாகனங்களை திருத்துதல் மற்றும் செய்வது தொடர்பில்நிவாரண வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களை அதற்காக பயன்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் அந்த நிறுவனம் மேலதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என்றும் வாகன திருத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் எத்தகைய சேர்விஸ்களும் பராமரிப்பும் மேற்கொள்ளப்படாத நிலையில் பெருமளவு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்த முடியாத அளவு மோசமான நிலையில் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நாட்டில் முழுமையாக 60 இலட்சம் வாகனங்கள் காணப்படுவதுடன் அவற்றில் பெரும்பாலானவை கார்களாகவும் முச்சக்கர வண்டிகளாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.