இக்காலக்காட்டத்தில் வாழ்வியல் மாற்றத்தால் 20 வயது உடையவர்களுக்கு கூட ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் அண்மைக் காலமாக 20 முதல் 40 வயதுள்ளவர்களுக்கு மாரடைப்பு போன்ற இதய நோய்கள் அதிகம் உண்டாகுகிறது.
இப்படிப்பட்ட பாதிப்புகள் சாதாரண நாட்களை விடவும் குளிர் காலங்களில் பெரிய அளவில் ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏன் குளிர் காலங்களில் மட்டும் மாரடைப்பு அதிக பேருக்கு ஏற்படுகிறது? எதனால் இது உருவாகிறது? இதை எப்படி சரிசெய்வது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருவதற்கே இந்த பதிவு.
குளிர்காலம் : பொதுவாக சளி, காய்ச்சல் போன்றவை குளிர்காலத்தில் அதிக பேருக்கு வரும். அதே போன்று மாரடைப்பு பாதிப்புகளும் குளிர் காலத்தில் அதிக பேருக்கு ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்களை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உடலின் அமைப்பு, தட்பவெப்ப நிலை குறைதல், இதயத்தின் செயல்பாடு அதிகரித்தல் போன்ற காரணங்களால் மாரடைப்பு, பக்கவாதம், திடீரென்ற இதய பாதிப்பு, இதய செயலிழப்பு ஆகியவை உண்டாகுகின்றன.
குளிர் காலத்தில் உடலின் தட்பவெப்ப நிலையை சீராக வைக்க, இதயம் வேகமாக இரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு செலுத்தும். இப்படி திடீரென்று நடைபெறுவதால் இதயத்தின் இரத்த நாளங்கள் பாதிப்படையும்.
இதய நோயாளிகளை எப்படி பாதிக்கும்? குளிர்காலத்தில் இதய நோயாளிகளின் உடல் தட்பவெப்ப நிலை குறைந்து விடும். இவ்வாறு குறைவதால் அவர்களின் இதயம் இரு மடங்கு வேலை செய்ய தொடங்கும். எனவே உடலுக்கு ஆக்சிஜென் அளவு அதிகம் தேவைப்படும். சட்டென அதிக ஆக்சிஜென் தேவைப்படுவதால் எதிர்பாராத விதமாக மாரடைப்பு உண்டாகுகிறது.
வேறு எதனால் ஏற்படுகிறது? பொதுவாக மற்ற காலங்களை விடவும் குளிர்காலத்தில் பெரிய அளவில் நாம் வேலைகளை செய்ய மாட்டோம். அதே போன்று உடற்பயிற்சி செய்வதையும் குறைத்து கொள்வோம். இது உங்களின் இதயத்திற்கு நல்லதல்ல.
மேலும் மோசமான உணவு பழக்கமும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் உடலுக்கும் மனதுக்கும் அழுத்தத்தை தரக்கூடிய வேலைகளை செய்வதாலும் மாரடைப்பு ஏற்படுகிறது.
முழு ஆடைகள் அணியுங்கள் : கால மாற்றத்துக்கு ஏற்ப ஆடைகளை அணிவது நல்லது. குளிர் காலத்தில் உடலை முழுவதுமாக மறைக்க கூடிய ஆடைகளை அணிய வேண்டும். இது உங்களின் தட்பவெப்ப நிலையை சீராக வைத்து மாரடைப்பு பாதிப்பை குறைக்கும். மேலும் அதிக மாசுபாடு உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி : குளிர்காலத்தில் உடலுக்கு ஏராளமான பாதிப்புகள் உண்டாகும். அவற்றை எளிதாக தடுக்க சிறந்த வழி உடற்பயிற்சி தான். ஒரே இடத்தில் மணி கணக்கில் உட்காருவதை தவிருங்கள். ஏதாவது வேலைகளை செய்யுங்கள்.
தொடர்ந்து உடலுக்கு வேலை கொடுப்பதால் உங்களின் தட்பவெப்ப நிலை சீராக இருக்கும். முடிந்த அளவு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்து வந்தால் மாரடைப்பு பாதிப்புகள் குறைவு.
பரிசோதனை : பொதுவாக உடலில் நீண்ட நாள் நோய்கள் இருந்தால் உறுப்புகளின் செயல்பாடுங்கள் சீராக இருக்காது. எனவே உங்களின் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவற்றை அடிக்கடி பரிசோதிப்பது நல்லது. இவ்வாறு சரியாக பரிசோதனை செய்யாமல் இருந்தால், மிகப்பெரிய ஆபத்து உங்களுக்கு ஏற்பட கூடும்.
உணவு பழக்கம் : குளிர்காலத்தில் அதிக பசி எடுக்கும். கிடைக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிடும் எண்ணம் உண்டாகும். பொரித்த உணவுகள், இனிப்பு பண்டங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் சாப்பிட கூடாது. மேலும் மதுபழக்கம் மற்றும் புகையிலை பழக்கத்தையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
மருத்துவரிடம் செல்லுதல்: மற்ற நாட்களை விடவும் குளிர் காலத்தில் மாரடைப்பின் பாதிப்பு அதிகம் என்பதால், அவ்வப்போது மருத்துவரை சந்தித்து உங்களை பரிசோதித்து கொள்ளுங்கள். திடீரென்று உடலில் எரிச்சல், மார்பில் அதிக வலி, வியர்த்து கொட்டுதல், தோள்பட்டை வலி, தாடையில் வலி, மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.