வெளிநாட்டில் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது.
போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
திம்பிரிகஸ்யாய பகுதியில் இந்த போலி வேலை வாய்ப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், போலந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் தொழில் வழங்குவதாக கூறி ஒருவரிடம் 555,000 ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த இடத்தில் இருந்து 11 கடவுச்சீட்டுக்கள், 4 பில் புத்தகங்கள், 50 பிரச்சார துண்டு பிரசுரங்கள் உட்பட பல ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.