சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இதை அடுத்து சீன தேசிய சுகாதார ஆணையம் மக்களுக்கு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
உள்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் பயணிகள் வெளியூர் சென்று வந்தால் கட்டாய தனிமை உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இதனால் சீன மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். அரசின் உத்தரவை எதிர்த்து போராட்டங்களும் நடத்தினர். இது அரசுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, கொரோனா கட்டுப்பாடுகளால் பலத்த பொருளாதார சிக்கலை சந்தித்த சீனா, இப்போது மீண்டும் பரவி வரும் உருமாறிய கொரோனாவால் மீண்டும் சிக்கலை சந்தித்தது.
எனவே, மக்களின் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள சீன அரசு முடிவு செய்தது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கியது.
அதன் முதல் கட்டமாக உள்நாட்டுக்குள் சுற்றுப்பயணம் செய்யும் பயணிகள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவை விலக்கி கொள்ள முடிவு செய்தது.
அதன்படி வருகிற 8 ஆம் திகதி முதல் கட்டாய தனிமை உத்தரவு விலக்கி கொள்ளப்படும் என்று சீன தேசிய சுகாதார ஆணையம் அறிவித்து உள்ளது. இதை அடுத்து இனி சீனாவுக்குள் பயணம் செய்பவர்கள் 5 நாட்கள் அரசு முகாம்களில் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்பதும், அதன்பிறகு வீடுகளில் 3 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் விலக்கி கொள்ளப்படுகிறது.