வெளிநாட்டிலுள்ள சுமார் 25 பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நடத்தி வருவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த கடத்தல்காரர்கள் டுபாய், பாகிஸ்தான், இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ளதாக புலனாய்வு பிரிவுகள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளன.
தற்போது இலங்கைக்கான ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தின் பிரதான பாதை மாலைத்தீவு கடற்கரையை ஒட்டியே உள்ளதென தெரியவந்துள்ளது.
இதுவரை கிடைத்த தகவலின்படி, கடத்தல்காரர்கள் சிறிய மீன்பிடி படகுகளை பயன்படுத்தி ஐஸ் கடத்துகின்றனர் என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கண்டுபிடித்துள்ளது.
சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்விற்கமைய, சுமார் 370 வகையான ஐஸ் போதைப்பொருட்கள் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்தியவர்களில் 80 சதவீதம் பேர் தற்போது ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் விலை குறைவு மற்றும் ஏனைய போதைப்பொருட்களை விட அதிக சக்தியை கொண்டுள்ளமையே மக்கள் அதிகம் அடிமையாக காரணம் என போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.