அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு ஏதும் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று விமர்சனங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இது வெறும் அரசியல் ஆர்வமுள்ள ஒருவரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டாக இருக்கலாம். இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான அரசின் செலவு சுமார் ரூ. 7885 பில்லியன். அதில் 10 சதவீதம் சமூக நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவினங்களைவிட அதிகமாகும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு 1,000 பில்லியன் ரூபாவுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேல் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக பதிவுசெய்யப்பட்ட 5.8 மில்லியன் குடும்பங்களில், சுமார் 3.4 மில்லியன் குடும்பங்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறும் நிலையில் உள்ளன.
தகுதியான குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட தொகை குறைக்கப்படும். இந்த சதவீதம் குறிப்பிட்ட அளவு குறைக்கப்பட்டாலும், அந்த அம்சத்தையும் கருத்தில் கொண்டு இந்த வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரித்துள்ளோம்.
எனவே, வரவுசெலவுத்திட்டம் மக்களுக்கு நிவாரணம் அளிக்கவில்லை என்று யாராவது கூறினால், அதை ஏற்க முடியாது. இந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியவில்லை.
அவர்களின் சம்பளமும் குறிப்பிட்ட தொகையால் குறைக்கப்படும் என்ற தவறான எண்ணம் அரச ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் இந்த சுமையை அரசு ஏற்றுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி முக்கியத்துவம் அளித்துள்ளதுடன், அவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களை நாங்கள் நன்கு அறிவோம் என குறிப்பிட்டுள்ளார்.