மில்லெனியவில் உள்ள பாடசாலையொன்றில் 5ஆம் வகுப்பு மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவத்தின் சூடுதணியும் முன்னரே, இதேபோன்ற மற்றொரு சோகச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுமி மீது இவ்வாறு மற்றுமொரு கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (10) அம்பலாந்தோட்டை லுனம துடுகெமுனு மகா வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் தமது மகளை ஆசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த ஆசிரியர் சிறுமியின் முதுகில் கம்பினால் கொடூரமாக தாக்கியதாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
முதலில், சிறுமி தனது தாயிடம் உண்மைகளை மறைக்க முயன்றுள்ள போதும் சிறுமியின் முதுகில் காயங்களைக் கண்ட தாய் விசாரித்ததில் சிறுமி நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பின்னர் சிறுமி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில், ஆசிரியர் சிறுமியின் தலைமுடியை இழுத்து தாக்கியுள்ள காரணத்தால் சிறுமியின் தாய் சிறுமியின் தலை முடியை வெட்டி பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து ஹுங்கம பொலிஸாரால் நேற்று பிற்பகல் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (11) அக்குனகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆசிரியர் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பாவிடம் “அத தெரண” வினவியது.
சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், திங்கட்கிழமை இடைக்கால அறிக்கை கிடைத்த பின்னர் ஆசிரியர் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை சிறுவர் வன்முறை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி மாதிவெல தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முன்பாக மௌன போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.