சுகாதார பீடத்தின் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு சமூக ஊடகங்கள் வழியாக ஆபாசமான அழைப்புகள் வருவதாக தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக சுகாதார பல்கலைக்கழக இணையத்தளத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரி நேற்று (04) தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக ஆபாசமான காணொளிகளை பரிமாற்றி இந்த புதிய வகையான பகிடிவதை மேற்கொள்ளப்படுவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதுதொடர்பான முறைப்பாடு பேராதனை காவல் நிலையத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த மாணவன் வீட்டில் இருந்து இணையவழியில் கல்வி கற்கும் போது வாட்ஸ்அப் சமூகவலைத்தளம் ஊடாக அழைப்பு விடுத்து, ஆபாச காட்சிகளை பரிமாற்றி பகிடிவதைக்கு உட்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான குரல் பதிவுகள் மற்றும் காணொளிகள் பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தின் ஒழுக்காற்று அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த ஆதாரங்கள் பின்னர் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பேராதனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.