வங்கி ஒன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள், பாதுகாப்பு கெமராக்களுக்குத் தெரியாத வகையில் முகத்தை குடையால் மறைத்துக்கொண்டு, அங்கிருந்த பாதுகாப்பு வைப்புப் பெட்டகத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அவிசாவளை மாரபே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று சந்தேக நபர்கள் கொள்ளைக்காக வந்துள்ளனர்.
தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த பெட்டகத்தை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அதில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் இருந்ததாகவும் அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வேனில் வந்த கொள்ளையர்கள் வங்கியின் முன்பக்க இரும்பு கதவை உடைத்து வங்கிக்குள் நுழைந்துள்ளதாக பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் வங்கியின் உள்ளேயும் வெளியேயும் இருந்த பாதுகாப்பு கெமராக்களை சேதப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்த பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர்கள் வங்கியில் இருந்த பெட்டகத்தை தரையில் இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
பின்னர் பிரதான கதவு அருகே பெட்டகம் வேனில் ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 40 நிமிடம் கொள்ளையர்கள் வங்கியில் தங்கியிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 591 425, 0718 593 754 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அவிசாவளை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.