மட்டக்களப்பில் வீடுகளை உடைத்து அங்கிருந்து 28 பவுண் தங்க ஆபரணங்கள் 2 இலச்சத்து 83 ஆயிரம் ரூபா பணம் மடிகணினி மணிக்கூடு போன்ற பெறுமதியான பொருட்களை களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் மற்றும் காத்தான்குடி பொலிஸ் பிரிலில் உள்ள 4 வீடுகளில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் ஒரே நாளில் தொடர்ச்சியாக 4 வீடுகளில் இடம்பெற்ற சம்பவம்! | 4 House Burglaries In Batticaloa In One Day Theft
மேலும் இந்த திருட்டு சம்பவம், 29 ஆம் திகதி சனிக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக அந்தந்த பிரதேச பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாளங்குடா பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான சனிக்கிழமை அதிகாலை வீட்டின் உரிமையாளர் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ள நிலையில் யன்னலை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 8 அரை பவுண் தங்க ஆபரணங்களையும் 33 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள இராசதுரை கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்துவரும் பெண் ஒருவர் அதே தினமான நேற்று காலை 9.00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக சந்தைக்கு சென்று 10 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த 5 பவுண் தங்க ஆபரணங்களையும் 2 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பாரதி வீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் வைத்தியசாலையில் உள்ள நிலையில் அவருக்கு பகல் உணவை கொடுப்பதற்காக 12.00 மணியளவில் அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வைத்தியசாலைக்கு சென்று 12.45 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவை உடைத்து 22 இலச்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 14 பவுண் தங்க ஆபரணங்கள் திருடிச்செல்லப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பார்வீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் சம்பவதினமான காலை 8 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு மனைவியை வேலைக்கு கொண்டு சென்று விட்டுவிட்டு அவரது மரக்கறி தோட்ட பண்ணைக்கு சென்று பணியை முடித்துவிட்டு பகல் 11 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் கதவை உடைத்து இங்கிருந்து 4 இலச்சத்து 31 ஆயிரம் ரூபா பெறுடதியான மடிகளணி, மணிக்கூடு, கையடக்க தொலைபேசி போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அந்த பகுதிகளில் உள்ள சிசிரி கமராவில் திருடர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களை இனங்கண்டுள்ளதாகவும் இந்த 4 வீடு உடைப்பு சம்பவங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த திருடர்களால் அதிகாலை 4 மணியில் பகல் 1 மணிவரையில் வீடுகளை உடைத்து திருடியுள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இந்த திருடர்களை தேடி வலைவீசி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை மட்டு. கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்கேணி 3 ம் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளரின் தாயாரை பார்ப்பதற்காக 27 ம் திகதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பசகிதம் தாயாரின் வீட்டுக்கு சென்று நேற்று 29 ம் திகதி பகல் வீடு திரும்பிய போது வீட்டின் கூரையை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அங்கு அலுமாரியில் இருந்த தலா 3 பவுண்கள் கொண்ட 6 பவுணுடைய இரண்டு தாலிக் கொடிகளை திருடிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.