நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டிலும் தொடர் மழை பெய்து வருகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது.
நீர் போசன பிரதேசங்களுக்கு பெய்துவரும் கடும் மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நவீன பலூன் வான் கதவுகளையும் கடந்து அனைத்து வான் கதவுகளிலும் இன்று (25) அதிகாலை முதல் நீர் வான் பாய்ந்து வருகின்றன.
இதே நேரம் ஏனைய நீர்த்தேக்கங்களான விலமசுரேந்திர, கெனியோன், லக்ஸபான, உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதனால் இந்த ஆற்றுக்கு அருகில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மவுசாகலை பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வான் பாயும் அளவினை எட்டி வருகின்றன.
எனவே நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் எந்நேரமும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கங்களுக்கு கிடைக்க பெரும் நீரினை பயன்படுத்தி உச்ச அளவு மின் உற்பத்தி இடம்பெற்று வருவதாக மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மலையகப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.
எனவே மண் மேடுகளுக்கு மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறித்தி உள்ளது.