சில பாடசாலைகளின் குடிநீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புசபை இறுதி அறிவித்தல் விடுத்துள்ளதாகவும், பாடசாலைகளுக்கு குடிநீர் கட்டணத்தை வழங்க அதிபர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதுவரை பாடசாலைகளில் குடிநீர் கட்டணத்தை அறவிடவில்லை எனவும், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கட்டணம் அறவிடப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் பாடசாலைகளில் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டால் மாணவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படும் நிலை ஏற்படும் என்றார்.
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து குடிநீர் கட்டணத்தை நிலுவையுடன் செலுத்துமாறும், 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்புடும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலைகளுக்கு வழங்கப்படும் குடி நீருக்காக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை சுமார் 26 மில்லியன் ரூபாவை செலவழிப்பதாகவும், ஆனால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை 12 மில்லியன் ரூபாவை பாடசாலைகளிடமிருந்து நிவாரணத் தொகையை எதிர்பார்ப்பதாகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.