தற்போதைய பணவீக்க நிலைமையை கட்டுப்படுத்த கையிருப்பிலுள்ள பண நிலைமை போதுமானது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
தற்போது, வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் டொலர்கள் உள்ளிட்ட அந்நிய செலாவணி வரவுகளில் முன்னேற்றம் உண்டு இதனால், அந்நிய செலாவணி பணப்புழக்கம் நேர்மறையான நிலையை எட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாத இறுதியில் தற்போதைய நாட்டின் பணவீக்கம் குறைவடையும் சாத்தியம் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், உள்நாட்டு கடன் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களிலும் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள யோசனையில் நாட்டின் பொருளாதார முறைகேடு குறித்து வெளியிட்டுள்ள கருத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படலாம் என்பது பற்றிய விடயம் இதுவரை வெளிப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.
இறுக்கமான நாணயக்கொள்கையைப் பின்பற்றுவதன் விளைவாக எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் பணவீக்கத்தை எதிர்பார்த்திருக்கும் மட்டத்திற்குக் குறைத்துக்கொள்ள முடியும். நாட்டின் பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதை முன்னிறுத்தியும், விரைவான பொருளாதார மீட்சியை இலக்காகக் கொண்டும் நாணயச் சபை பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றது.
உள்நாட்டுப் பொருளாதார செயற்பாடுகளைப் பொறுத்த மட்டில், பொருளாதாரம் முதல் அரையாண்டில் 8 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இரண்டாம் அரையாண்டிலும் இது தொடரும் என்று எதிர்பார்ப்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.